குழந்தை வளர்ப்பு முறை
பிள்ளை வளர்ப்பு :
ஒரு பிள்ளையை வளர்ப்பது என்பது ஒரு நெடும் பயணமாகும். பிள்ளை வளர வளர பெற்றோரும் பிள்ளையும் பல அனுபவங்களைப் பெறுகிறார்கள். இவ்வனுபவங்கள் பெற்றோருக்கும் பிள்ளைக்கும் பெரும் சவாலாக அமைகின்றன. குழந்தையை வழிநடத்திச் செல்வதில் பெற்றோர் இருவருக்கும் சமபங்கு உண்டு. குழந்தை தன்னுடைய அடையாளத்தைப் பெற பெற்றோர் இருவருமே ஒன்றிணைந்து பங்காற்ற வேண்டும். இதனால் பிள்ளைக்குச் சம அளவிலான கவனிப்பை அவர்களால் வழங்கமுடியும். பிள்ளை வளர்ப்பை மேம்படுத்த பெற்றோருக்கு இதோ சில வழிமுறைகள்.
ஒருவருக்கொருவர் ஆதரவு:
- பெற்றோராவது ஒரு சுவையான அனுபவம். இருப்பினும் பிள்ளையுடன் சிரித்து, பேசி விளையாடி மகிழ்வது மட்டும் பெற்றோரின கடமையன்று .
- பிள்ளையை நல்வழிப்படுத்த பெற்றோருக்கும் பொறுமை, கட்டுப்பாடு மற்றும் கட்டொழுங்குத் திறன் ஒருங்கே இருக்க வேண்டும்.
- பிள்ளை வளர்ப்பில் தம்பதியர் இருவரின் பங்கெடுப்பு அவசியம். இதனால் மன உளைச்சல், கோபம் போன்றவற்றைத் தவிர்க்கலாம். பிள்ளையைக் கவனித்துக்கொள்ள கணவர் மனைவிக்கு உதவலாம். மேலும், தாத்தா பாட்டி வீட்டிற்குப் பிள்ளையை அனுப்பலாம். இதனால் பெற்றோர் தங்களுக்கென்று சிறிது நேரத்தை ஒதுக்க முடியும.
பிள்ளை வளர்ப்புப்பற்றி கலந்துரையாடல்:
குழந்தை வளரும் காலக்கட்டத்தில் பெற்றோர் பல சவால்களை எதிர்நோக்குவர். பெற்றோர் ஒருவர் மட்டும் இச்சவால்களைச் சமாளிக்க முயல்வது இயலாத காரியம். இருவரும் ஒன்றிணைந்து சங்கடங்களைப் பிரச்சனைகளை மிக எளிதில் தீர்க்க முடியும்.

எதைப்பற்றிக் கலந்துரையாடலாம்?
- குழந்தையுடன் பேசி, பழகி அவன் எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு பெற்றோர் இருவரும் கலந்து ஆலோசித்தால், குழந்தை எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் பற்றி பொது கருத்திணக்கம் ஏற்படும்.
- பிள்ளையின் பிரச்சினையைக் களைய பெற்றோர் எடுத்த, எடுத்துவருகின்ற செயல்பாடுகளைப் பற்றி இருவரும் அறிந்திருக்க வேண்டும். அத்திட்டங்கள் எவ்வித பலனைத் தருகின்றன என்பதையும் இருவரும் ஒன்றிணைந்து கண்காணிக்க வேண்டும்.
- குழந்தையின் வளர்ச்சியில் பெற்றோர் எதைச் செய்யவிருக்கிறார்கள், எதிர்பார்க்கிறார்கள் என்பதை ஒருவருக்கொருவர் தெரியப்படுத்த வேண்டும். ஒரு கால அட்டவணையையும் தயாரித்துக்கொள்ளலாம்.
- அனைத்து பிரச்சினைகளையும், வெவ்வேறு அணுகுமுறைகளையும் நன்கு ஆலோசியுங்கள்.
- எடுத்த ஒரு முடிவை எப்படி செயல்படுத்துவது என்ற வழிமுறைகளைக் குறித்து வைத்து அதன்படி செயல்படுங்கள்.
ஒன்றிணைந்த செயல்பாடு:
பெற்றோர் இருவரும் ஒன்றாக பணியாற்றினால், கட்டுப்பாடும் ஒழுங்கும் மேலோங்கும். ஏனெனில்
- பெற்றோர் இருவரும் ஒரு காரியத்தைப்பற்றி விளக்கும் பொழுது, அக்காரியம் பிள்ளையிடம் மிகுந்த முக்கியத்துவம் பெரும்.
- பெற்றோர் பிள்ளையிடத்தில் கட்டுப்பாட்டை வலியுறுத்த முடியும். தாயிட்ட ஆணையைத் தந்தை பிள்ளையிடம் மீண்டும் வலியுறுத்துவதால், அங்கு தாயின் மதிப்புக் கூடுகிறது. பிள்ளையின் முன் பெற்றோர் ஒருவரையொருவர் குறைகூறுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையேல் நாளடைவில் பிள்ளைக்குப் பெற்றோர் மேல் உள்ள மரியாதை குறைந்துவிடும்.
- பெற்றோர் இடையே கருத்து ஒருமிப்பு இல்லையேல், பிள்ளை பெற்றோரில் ஒருவரை தன்னுடைய காரியங்களைச் செயல்படுத்த மிக சுலபமாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.
முன் மாதிரி:
வீட்டில் பெற்றோர் நடந்துகொள்ளும் விதத்தை வைத்தே பிள்ளையின் நடவடிக்கைகள் அமையும். ஆண் குழந்தை தந்தையையும், பெண் குழந்தை தாயையும் முன் மாதிரியாக ஏற்றுக்கொள்வர். மேலும், பதின்மவயதை அடையும்போது உடற்கூறில் ஏற்படும் மாற்றங்களைப்பற்றி பெற்றோர் பிள்ளையுடன் பேச முற்படவேண்டும்..
சிறந்த தகவல்கள், பண்புகள்:
வளரும் குழந்த பலவற்றில் ஆர்வம் கொண்டிருக்கும். இவ்வார்வத்தைப் பயன்படுத்தி பெற்றோர் குழந்தைக்குப் பல பயனுள்ள தகவல்களை அளிக்க வேண்டும். இதனால் பிள்ளை தவறான சிந்தனைக்கு உட்பட மாட்டான். குழந்தைக்குக் கூறப்படும் செய்தி இயற்கையானதாகவும் வாழ்க்கையுடன் தொடர்புடையதாகவும் இருத்தல் அவசியம். பெற்றோருக்கு உதவக்கூடிய நடவடிக்கைகள்:
- சமீபத்தில் பார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பற்றியும், அந்நிகழ்ச்சியில் குழந்தைக்குப் பிடித்த கதாபாத்திரங்களைப் பற்றியும், அக்கதாபாத்திரங்களைக் குழந்தைக்கு ஏன் பிடித்திருக்கிறது என்பதைப் பற்றியும் பெற்றோர் குழந்தையுடன் கலந்து ஆலோசிக்கலாம்.
- பெற்றோர் சொல்ல விரும்பும் செய்திகளை நடித்துக் காட்டினால், அவை குழந்தையின் மனதில் பசு மரத்தாணிப்போல் பதியும்.
- குழந்தைக்குப் பழக்க வழக்கங்களைக் கற்பிக்கும் பொழுது, முன் மாதிரிகளைச் சுட்டிக்காட்டலாம்.