Widehunt

கோவை சொத்து விற்பனை · தமிழக செய்திகள்

பரிகாரங்கள்ரியல் எஸ்டேட்வாஸ்து சாஸ்திரம்

வாஸ்து சாஸ்திரம் – சத்குரு

இவ்வளவு பயம் தேவையா?

வளம் கொழிக்கும் வாஸ்து சாஸ்திரம் (Vastu Shastra), உங்கள் சமையல், குளியல், படுக்கை அறை என அத்தனைக்கும் வாஸ்து பெயின்ட்; கட்டிடக் கலையில் முக்கிய இடம் வகிக்கும் வாஸ்து என்று இன்று திசை பார்த்து வீடு கட்டுகிறார்களோ இல்லையோ, வாஸ்து consultantஐ அணுகாமல் வீட்டைக் கட்டுவதே இல்லை. இதில் வாடகை வீட்டில் வசித்துக் கொண்டு வாஸ்து செய்ய முடியாமல் தவிக்கும் ஜனமே ஏராளம். இப்படி நம்மை வாட்டி வதைக்கும் வாஸ்து சாஸ்திரத்தில் அத்தனை உண்மை இருக்கிறதா?

சத்குரு என்ன சொல்கிறார்?

வாஸ்து சாஸ்திரம் (Vastu Shastra) எதற்காக உருவாக்கப்பட்டது?

சத்குரு :

வாஸ்து என்பது பண்டைய காலத்தில் கட்டிட கலைக்கான ஒரு எளிய வழிகாட்டி. வாஸ்து வெவ்வேறு நிலப்பகுதிகளுக்கு, வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு மாறுபடும். மலைப்பகுதியில் வாழ்ந்தால் ஒரு விதமான வாஸ்து, நிலப்பரப்பில் வாழ்ந்தால் ஒரு விதமான வாஸ்து, வெப்பமான பகுதிக்கு ஒரு விதம், குளிர் பிரதேசங்களுக்கு ஒரு விதம் என மாறுபடும்.

வாயிற்கதவு இங்கே இருந்தால் பணம் போய்விடும், அங்கே இருந்தால் ஏதோ ஒன்று வரும் என்று நம்பத் துவங்கிவிட்டீர்கள். இது முட்டாள்தனம்.

அந்த காலத்தில் உங்கள் கிராமத்தில் கட்டிடக் கலை நிபுணர்கள் கிடையாது. எனவே ஒருவர் தன் வீட்டை 80 அடி அகலத்தில், 50 அடி அகலத்தில் கட்டும் வாய்ப்பு உள்ளது. இப்படி சுரங்க வழிப் பாதை போன்ற வீட்டில் ஒருவர் வாழ்ந்தால், அந்த இடம் அழுத்தம் தர ஆரம்பிக்கும். இயல்பாக நீங்களும் இறுக்கமானவராக மாறி விடுவீர்கள்.

எனவே, எளிமையான வழிமுறைகளை வகுத்துச் சென்றார்கள். ஒரு அறையானது இந்த அளவில், இந்த முறையில் இருக்க வேண்டும். குறிப்பிட்ட முறையில் இருந்தால் காற்றோட்டம் நன்றாக இருக்கும். அந்த சூழ்நிலையில் சக்தியும் சிறப்பாக இருக்கும். இது உடல்நலனுக்கும், நல்வாழ்வுக்கும் வழி வகுக்கும். இப்படி அடிப்படையான வழிமுறைகளை நிறுவினார்கள். இல்லாவிட்டால் நீங்கள் நீள் சதுரமான அல்லது வடிவமே இல்லாத வீடுகளைக் கட்டுவீர்கள்.

இன்றைக்கு கட்டிடக் கலை வல்லுனர்கள் இருப்பதால் இப்படிக் கட்ட வேண்டும், இப்படி செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். எத்தனை பழைய வீடுகளில் காற்றோட்டத்துடன் வீடு சரியான முறையில் அமைக்கப்பட்டு இருக்கிறது என்று பாருங்கள். சுவாசிக்க கூட முடியாத வகையில்தானே பலர் கட்டி வைத்திருக்கிறார்கள். அப்படி ஒரு வீட்டில் வாழ்ந்தால் உடல், மன நலம் சீர்கேடும். வேறு சில உபாதைகளும் ஏற்படும். இதற்காகத்தான் சில விதிமுறைகளை ஏற்படுத்தினர்.

நீங்கள் பயத்தில் இருந்தால்…

ஆனால் இன்று உங்கள் பயத்தால் அதை நீங்கள் பெரிதுபடுத்த ஆரம்பித்து விட்டீர்கள். வாயிற்கதவு இங்கே இருந்தால் பணம் போய்விடும், அங்கே இருந்தால் ஏதோ ஒன்று வரும் என்று நம்பத் துவங்கிவிட்டீர்கள். இது முட்டாள்தனம். உங்கள் பயத்தை யாரோ பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவ்வளவுதான்.

பயம் ஆட்சி செய்தால் எதிலிருந்தும் அறிவியலை உருவாக்கலாம். 20 வருடங்களுக்கு முன் வாஸ்து பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. ஆனால் மக்கள் நன்றாக வாழவில்லையா? இதைப் பற்றி எதுவும் தெரியாத உங்கள் தகப்பனாரை விட உங்கள் தாத்தாவை விட நீங்கள் நன்றாக வாழ்கிறீர்களா என்ன? ஒரு எளிய வழிமுறை, உங்கள் வாழ்க்கையே அதைச் சார்ந்திருப்பது போல செய்து கொண்டீர்கள்.

பயம் இருந்தால், உங்களை எப்படி வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் பயத்தில் இருந்தால், உங்களை எதை வேண்டுமானாலும் நம்பச் செய்யலாம்.

எதற்காக தென்மேற்கு பகுதி உயரம் அதிகமாக இருக்க வேண்டும்?

நம் நாட்டின் இந்தப் பகுதியில் ஏன் தென்மேற்கு பகுதி வடமேற்கு பகுதியை விட உயரமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் என்றால், இந்தப் பகுதி அதிகமான தென்மேற்கு பருவ மழை பெறுகிறது. காற்றும் மழையும் ஜூன் மாதத்தில் அதிகமாக இருக்கும். மழைக்கு ஒரு மாதம் முன் காற்றும் வேகமாக வீசும். நம் கட்டிடங்களுக்கு இது சோதனைதான்.

ஜூன் மாதம் கூரையைக் காற்று பிய்த்துக் கொண்டு போகும். ஜூலையில் மழை உங்கள் மீது பொழியும். இது இயற்கையின் முறை. எனவே, தென்மேற்கு பகுதி சுவர்கள் உயரமாக இருந்தால் காற்றை அது தடுக்கும். வீடு காற்றால் புரட்டிப் போடப்படாது. ஆனால் இந்த ஆள் கம்பம் நட்டுவிட்டு எல்லாம் சரியாகிவிடும் என்கிறார். இதுபோன்ற முட்டாள்தனமான செயல்கள் வாஸ்துவின் பெயரால் நடக்கிறது. தங்கள் வீட்டையே உடைத்து கொள்கின்றனர். குளியலறையை படுக்கை அறையாகவும், படுக்கை அறையை சமையல் அறையாகவும் மாற்றிக் கொள்கின்றனர்.

பெரிதுபடுத்தப்பட்ட எளிய விதிமுறைகள்

நான் வாழும் வீட்டின் அளவும், வடிவமும்தான் நான் யாரென்பதை தீர்மானிக்கிறது என்றால் அது அவமானம் இல்லையா? உயிரற்ற பொருட்கள் மனிதனின் இயல்பை தீர்மானிக்க வேண்டுமா அல்லது மனித இயல்பு பொருட்களின் தரத்தை தீர்மானிக்க வேண்டுமா, சொல்லுங்கள். துரதிருஷ்டவசமாக உங்கள் இயல்பை உங்களைச் சுற்றி இருக்கும் பொருட்களின் வடிவத்துக்காக, உருவத்துக்காக தொலைத்து விட்டீர்கள். என்ன செய்வது, புத்திசாலித்தனம் இல்லை, பயம்தானே நம்மை ஆட்சி செய்கிறது. பயம் இருந்தால் நீங்கள் புத்திசாலிதனத்தை இழந்து விடுவீர்கள்.

உயிரற்ற பொருட்கள் மனிதனின் இயல்பை தீர்மானிக்க வேண்டுமா அல்லது மனித இயல்பு பொருட்களின் தரத்தை தீர்மானிக்க வேண்டுமா, சொல்லுங்கள்.

சுமார் 1000 வருடங்களுக்கு முன்னால் வீடு கட்ட வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். எந்த காலகட்டத்திலும், சுவர் எழுப்புவது பிரச்சனை இல்லை. கூரைதான் சவால். இப்பொழுது எஃகு, சிமெண்ட் போன்ற பல கட்டிட சாமான்கள் இருப்பதால், தேவையான வகையில் சௌகரியமாக அமைத்துக் கொள்வதற்கு தேவையான சுதந்திரம் நம்மிடம் இருக்கிறது. ஆனால் முற்காலத்தில் மரம் மட்டுமே மூலதனமாய் இருந்தது.

பண்ணையில் இருக்கும் மரத்தை வெட்டி பயன்படுத்தினால், அந்த குட்டையான மரத்தில் என்ன கட்ட முடியும்? அதன் தண்டு 8 அடிக்கு இருக்கும். அதை வைத்துக் கொண்டு, 8 அடி அகலத்தில் வீடு கட்ட முடியும். ஆனால் 10 குழந்தைகள் உள்ள வீட்டில், 100 அடி நீளத்தில், 8 அடி அகலத்தில் சுரங்க வழிபோலத்தான் ஒருவரால் வீடெழுப்ப முடியும்.

இதற்குத்தான் சில எளிய விதிமுறைகளை வகுத்து வைத்தார்கள். வீடு கட்டினால், சுவர் இந்த அளவில் இருக்க வேண்டும், ஜன்னல் இவ்வளவு இருக்க வேண்டும் என்று சொல்லிச் சென்றார்கள். எனவே கட்டிடக்கலை பொறியியலுக்கு என்று சில விதிகள் இருக்கிறது. சுயமாக யோசித்து செய்ய இயலாதவர்கள், இந்த விதிமுறைகளைப் பின்பற்றலாம். இத்தனை சதுர அடிக்கு இத்தனை ஜன்னல் என்ற விதியைப் பயன்படுத்தலாம். எனவே வாஸ்து என்று நீங்கள் குறிப்பிடுவது இந்த விதிமுறைகளைத்தான். இது இடத்திற்கு இடம் மாறுபடும்.

கடந்த சில வருடங்களில் சிலர் இதைப் பெரிய அளவில் வியாபாரமாக்க முடிவு செய்துவிட்டனர். நம்ப முடியாத விகிதாச்சாரத்தில் இது வளர்ந்து விட்டது. உங்கள் உடல்நலனை நிர்ணயிக்கிறது. உங்கள் வியாபாரத்தை நிர்ணயிக்கிறது.. இப்படி எல்லாம் செய்கிறது. மக்கள் வீடுகளை இடிக்க துவங்கினார்கள். சமையலறை இருக்கும் இடத்தில குளியலறை கட்டுவது, சமைக்கும் இடத்தில் தூங்குவது என்று முட்டாள்தனமாக செயல்பட ஆரம்பித்து விட்டார்கள்.

மக்களுக்கு இதற்காகும் செலவு பற்றி கவலை வரவும், வாஸ்து ஆலோசகர்கள் புதிய தீர்வுகளைத் தரத் துவங்கி விட்டார்கள். ஒரு கல்லை நடுங்கள், எல்லாம் சரியாகிவிடும், ஒரு கண்ணாடி வையுங்கள் அனைத்து துர்சக்திகளும் உங்கள் பக்கத்துக்கு வீட்டுக்காரரை நோக்கித் திரும்பி விடும் என்று புதிய முறைகளை கண்டுபிடித்தார்கள்.

அடிப்படையில், பயம்தானே மக்களை ஆள்கிறது.

Karthik Hitech

Karthik Hitech writes for Widehunt on property and land across Coimbatore and Tamil Nadu, alongside Tamil Nadu news, share market and health coverage.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *