ஏப்ரல் 19ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை
லோக்சபா தேர்தல் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக 40 தொகுதிகளிலும் நடைபெற போகிறது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் சம்பளத்துடன் கூடிய பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவை அடுத்து ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற போகிறது. இதில் முதற்கட்ட தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள் 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற போகிறது. அன்றைய தினமே தமிழ்நாட்டில் காலியாக உள்ள கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக உள்ள திமுக பெரிய கூட்டணி அமைத்து போட்டியில் இறங்கி உள்ளது. அதேபோல் எதிர்க்கட்சியான அதிமுகவும் கூட்டணி அமைத்து களம் இறங்கி உள்ளது. இதேபோல் மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவும் பெரிய கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. சீமானின் நாம் தமிழர் கட்சி தனியாக களம் இறங்கி உள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நா.த.க என நான்கு முனை போட்டி நிலவுகிறது. தற்போது அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான நடைமுறைகளை தீவிரமாக செய்து வருகிறது. கடந்த மார்ச் 20ம் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. மார்ச் 27ம் தேதி வேட்பு மனுதாக்கல் நிறைவு பெற்றது. நேற்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்று முடிந்தது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற நாளை கடைசி நாளாகும். நாளைஇறுதி வேட்பாளர் பட்டியலும், சுயேட்சைகளுக்கு சின்னமும் ஒதுக்கப்படும். இந்நிலையில், தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி! ‛மாஸ்டர் பிளான்’ இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், “வாக்குப்பதிவு நாளன்று தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட அரசு மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும். மேலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐடி நிறுவனங்கள்) மற்றும் வணிகச் செயலாக்க அயலாக்கம் (BPO) நிறுவனங்களும் தங்களது பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இது தொடர்பாக புகார் அளிக்க மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகளை உருவாக்கி அதற்கான எண்களை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும்” இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.