புதிய வரலாறு படைத்த பிரக்ஞானந்தா.. விஸ்வநாதன் ஆனந்தை முந்தி சாதனை
இந்திய வீரர்களில் உச்சம்.. இந்திய செஸ் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தமிழக வீரர் விஸ்வநாதன் ஆனந்தை விடவும் அதிக புள்ளிகள் பெற்று இளம் வீரர் பிரக்ஞானந்தா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தியாவில் “செஸ்” விளையாட்டின் முகமாக நீண்ட ஆண்டுகளாக விஸ்வநாதன் ஆனந்த் இருந்து வருகிறார்.
2000, 2007, 2008, 2010 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை இருமுறை கைப்பற்றியுள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனி ஒருவரான விஸ்வநாதன் ஆனந்த் செஸ் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
இதன் காரணமாக இந்திய செஸ் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் எப்போதும் விஸ்வநாதன் ஆனந்த் தான் முதலிடத்தில் இருப்பார். கடந்த ஆண்டு உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் போது இந்திய இளம் வீரர் குகேஷ் விஸ்வநாதன் ஆனந்தை விடவும் அதிக புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்தார். ஆனால் அவர் அடுத்தடுத்து அடைந்த தோல்விகளால், தக்க வைக்க முடியவில்லை. இதனால் விஸ்வநாதன் ஆனந்த் முதலிடத்திற்கு திரும்பினார்.
இந்த நிலையில் நெதர்லாந்து நடைபெற்று வரும் டாடா ஸ்டீஸ் மாஸ்டர்ஸ் தொடரில் தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா கலந்து கொண்டுள்ளார். இந்த தொடரின் முதல் 3 சுற்று போட்டிகளில் டிராவில் முடிவடைந்த நிலையில், 4வது சுற்றில் கிளாசிக்கல் சேஸ் போட்டிகளின் சாம்பியனான டிங் லிரெனை எதிர்கொண்டார். அந்த போட்டியில் டிங் லிரெனை பிரக்ஞானந்தா வீழ்த்தி அசத்தினார். ஆட்டம் டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிங் லிரென் அடுத்தடுத்து செய்த தவறுகளால் பிரக்ஞானந்தா எளிதாக வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலமாக இந்திய செஸ் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் 18 வயதான பிரக்ஞானந்தா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஃபிடே தரவரிசை பட்டியலின் படி விஸ்வநாதன் ஆனந்த் 2748 புள்ளுகளுடனும், பிரக்ஞானந்தா 2748.3 புள்ளிகளுடனும் உள்ளனர். 12 வயதிலேயே கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா, கடந்தாண்டு நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.