பல்வேறு வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் படிப்பு எது?
வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் படிப்பு
பள்ளிக் கல்வி பயிலும் ஒவ்வொருவருக்கும் முக்கியமான காலகட்டம் எதுவெனில் பத்தாம் வகுப்பு முடித்த பின்னர் என்ன படிக்கலாம் என்பதை தேர்வு செய்வதில்தான் உள்ளது. நாம் தேர்ந்தெடுக்கும் படிப்புதான் நம்மை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும். பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு மேற்கொண்டு என்ன படிக்கலாம் எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கலாம்? என்ன ஒவ்வொரு மாணவர்களும் தங்களுடைய எதிர்காலத்தைத் தேர்வு செய்ய வேண்டிய தருணம் இது. முதல் மதிப்பெண் பெற்றவர்கள்தான் வாழ்க்கையில் முன்னேறுவார்கள், அதிக மார்க் வாங்கியவர்கள்தான் அனைத்து வசதியான வாழ்க்கையையும் வாழ்வார்கள் எனும் தவறான மனப்போக்கை மாணவர்கள் மனதில் விதைக்காமல் உனக்குப் பிடித்த துறையைத் தேர்வு செய் என்று பெற்றோர்கள் அறிவுறுத்தும் தருணம் இது.
பள்ளிக்கல்வியை முடித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்கள் முதலில் உயர் கல்வியில் என்னென்ன துறைகள் இருக்கிறது என்று தெரிந்து கொள்வது நல்லது. இங்கே ஒவ்வொரு துறை ரீதியாக பலவிதமான பட்டப்படிப்புகள் உண்டு. பெற்றோர்களும் மாணவர்களும் இணைந்து, பிடித்த, ஈடுபாடுள்ள துறையிலான படிப்பைத் தேர்வு செய்வது அவசியம். லட்சக்கணக்கான பணத்தைச் செலவு செய்து படிக்கும் உயர்கல்விதான் சிறந்த கல்வி. அப்படி படித்தால்தான் உடனடியாக வேலை கிடைக்கும் என்கிற தவறான புரிதல் இங்கு இன்னும் மிஞ்சியிருக்கிறது.
மருத்துவம்: நீட் தேர்வு கட்டாயம் எனும் விதிமுறைக்குப் பிறகு எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்புக்கான மோகம் சற்று குறைந்து காணப்படுகிறது. இதற்கு இணையான சித்தா, ஹோமியோபதி, யுனானி, யோகா, நேச்சுரோபதி என ஐந்தரை ஆண்டு கால படிப்பில் சேர்வதற்கு மத்திய அரசால் நடத்தப்படும் அகில இந்திய அளவிலான பிரத்யேகத் தேர்வுகள் எழுதவேண்டும். கால்நடை மருத்துவப் படிப்பான B.V.Sc., பிவெர்ட்னரி சயின்ஸ் பட்டப்படிப்பும் நல்ல துறைதான் என்கிறார்கள் வல்லுநர்கள். மருத்துவப்படிப்புக்கு நிகராக தற்போது (B.P.T) பிபிடி எனப்படும் பிஸியோ தெரபி படிப்புகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
பிளஸ் டூ மதிப்பெண்களுடன் நுழைவுத்தேர்வு அல்லது மாநில அளவில் பொது கலந்தாய்வின் மூலம் சேரலாம். இதேபோன்று பி.எஸ்.ஸி., நர்ஸிங், பிஃபார்ம், டிஃபார்ம் பார்மஸி படிப்புகளையும் பெறலாம். தற்போது மருத்துவப்படிப்பைத் தாண்டி இவை வேலைவாய்ப்பு அதிகமுள்ள துறைகளாக வளர்ந்துவருகின்றன.
அறிவியல் சார்ந்த படிப்புகள்: பி.எஸ்.ஸி.,இயற்பியல் முடித்து எம்.எஸ்.ஸி படித்தால் அரசு நிறுவனங்களில் விஞ்ஞானிகளாக பணிபுரியலாம். ஆராய்ச்சித்துறையில் அதிக வேலை வாய்ப்புகள் உண்டு. அரசுக் கல்லூரியில் இத்தகைய படிப்புக்கு கட்டணமும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. பி.எஸ்.ஸி., வேதியியல் மருந்து தயாரிப்பு குறித்த பணியிலும் வேலை வாய்ப்புகள் உண்டு. அதே நேரம் எம்.எஸ்.ஸி., படித்து முடித்து CSIR தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் நல்ல ஊதியத்துடன் பணி நிச்சயம். பி.எஸ்.ஸி., கணிதம், புள்ளியியல் போன்ற பிரிவுகளையும் படிக்கலாம்.
கலை சார்ந்த படிப்புகள்: பி.ஏ., பொருளாதாரம், வரலாறு போன்றவை டிகிரியாக கருதப்படும் அதேவேளையில், மேற்கொண்டு இதே துறையில் உயர்கல்வியை படித்தால் விற்பனை, பொருளாதாரம், வர்த்தகம் போன்ற துறையில் வேலை வாய்ப்பைப் பெறலாம். இவை தவிர மொழிப்பாடங்களான பி.ஏ. ஆங்கிலம் சேர்ந்து அவற்றிலேயே முதுகலையும் முடித்து எம்.ஃஃபில் பட்டம் பெற்று ஆசிரியராகப் பணிபுரியலாம்.
அரசு மற்றும் தனியார் கல்வித் துறைகளில் வேலை வாய்ப்பு அதிகமுள்ள படிப்பு இது. ஊடகத்துறையில் விருப்பம் உள்ளவர்கள் பி.ஏ. ஊடகத்துறை, பி.எஸ்ஸி விஷுவல் கம்யூனிகேஷன், மாஸ் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் மீடியா, ஜர்னலிசம் படிப்பில் சேர்ந்து படிக்கலாம். ஆங்கிலப் புலமையும் கற்பனைத்திறனும் அறிவுத்திறனும் இருந்தால் ஊடகத்துறையில் சிறந்து விளங்கலாம். பிளஸ் டூவில் வணிகம், கணக்குப்பிரிவு படித்த மாணவர்கள், வருங்காலத்தில் சி.ஏ. முடித்து ஆடிட்டராக வேண்டும் என்ற மாணவர்களின் முதல் சாய்ஸ் பி.காம்., படிப்புதான்.
அதைத் தொடர்ந்து CA., CMA., ICWAI., ACS., ICS., தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மருத்துவர், பொறியாளருக்கு இணையான பதவியும், ஊதியமும் கிடைக்கும். உயர்ந்த நிறுவனங்களில் கணக்காளராக பதவி புரியும் வாய்ப்பு அதிகம். முன்பெல்லாம் பட்டப்படிப்பை முடித்த பிறகுதான் இதர தேர்வுகளுக்கு முயற்சி செய்யமுடியும். ஆனால் தற்போது பட்டப்படிப்பு படிக்கும்போதே இந்தப் பயிற்சிக்கான தொடக்க நிலை தேர்வுகளையும் எழுதுவதால் காலம் வீணாவதில்லை.
பிபிஏ எனப்படும் மேலாண்மை படிப்பு பெரிய நிறுவனங்களில் விற்பனை மற்றும் விளம்பரப் பிரிவில் வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும். இதைத் தொடர்ந்து எம்பிஏ முடித்தால் வெளிநாடுகளிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் பணி புரியலாம். உலகம் கணினி மையம் என்பதால் கணினித் துறையில் ஆர்வம் இருப்பவர்கள் பி.சி.ஏ, பி.எஸ்.ஸி கணினி அறிவியல் கல்வியில் சேரலாம்.
ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிக வேலைவாய்ப்புகள் இந்தத் துறைக்கு வந்துகொண்டே இருக்கின்றன. மேலும் எம்.எஸ்.ஸி முடித்தால் பொறியாளருக்கு இணையான ஊதியத்தையும் ஐடி துறையில் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஓவியத்தில் திறமை இருப்பவர்கள் அரசு ஓவிய நுண்கலைக் கல்லூரியில் BFA., படிப்பில் சேரலாம்.
இசைத்துறையில் ஆர்வமிக்கவர்கள் அரசு இசைக் கல்லூரிகளில் சேரலாம். திரைப்படத்துறையில் கால்பதிக்க விரும்புபவர்களுக்கு சென்னை அரசு திரைப்படக்கல்லூரியில் பல பிரிவுகளுக்கு டிப்ளமோ படிப்பு கற்றுத்தரப்படுகிறது. அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஃபேஷன் டெக்னாலஜி பட்டப்படிப்புக்கு வேலைவாய்ப்பு பெருகியுள்ளது.
ஆடை வடிவமைப்பு, ஆடை உற்பத்தி, புதிய டிஸைன்கள் வடிவமைப்பு போன்ற பட்டப்படிப்புகள் இதில் சொல்லித் தரப்படுகின்றன. சென்னை தரமணியில் மத்திய அரசுக் கல்லூரியான நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜி என்னும் புகழ் பெற்ற கல்வி நிறுவனத்தில் பயிலலாம்.
வேளாண் துறை சார்ந்த படிப்புகள்:
தற்போது இந்தத் துறைக்கு மவுசு கூடியுள்ளது. பி.எஸ்.ஸி அக்ரிகல்சர் மற்றும் தோட்டக்கலை. வேளாண் பல்கலைக்கலையின் கீழ் கோவை, திருச்சி, பெரியகுளம் போன்ற இடங்களிலும் இந்தப் படிப்புகள் உண்டு.
பி.டெக் எனும் Food Process Engineering படிப்பும் வேலை வாய்ப்புள்ள படிப்புதான். சமையல் சார்ந்த படிப்பான கேட்டரிங், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், சுற்றுலாத்துறை போன்ற படிப்புகள் நேரிடையாக வேலைவாய்ப்பைப் பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை.
ஐடி நிறுவனங்கள் மட்டும்தான் வெளிநாடுகளில் பணிவாய்ப்பு வழங்கும் என்றில்லாமல் உணவுத்துறை சம்பந்தப்பட்ட இந்த படிப்புகள் விமானம், கப்பல் மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் புகழ்பெற்ற சமையல் நிபுணராக உங்களை உருவாக்கும்.
இளநிலை பட்டப்படிப்புகளை வழங்கும் அரசுக் கல்லூரிகளும், தனியார் கல்லூரிகளும் நூற்றுக்கணக்கில் புகழ்பெற்று விளங்குகின்றன. தற்போது பிஎஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, பிளான்ட் பயாலஜி, டயட்டீஷியன், ஹோம் சயின்ஸ், உளவியல் போன்ற பட்டப்படிப்புகளையும் இணைத்து கற்றுத்தருகின்றன.
இப்போது சட்டக்கல்லூரியில் சேர்வதற்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது. அரசு சட்டக்கல்லூரிகளில் சேர்வதற்கு பிளஸ்டூவில் எந்த குரூப் எடுத்திருந்தாலும் சேரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறியியல்:
அகில இந்திய அளவில் பி.இ., பி.டெக்., படிக்க விரும்பும் மாணவர்கள் ஐ.ஐ.டி.,என்.ஐ.டி நிறுவனங்களில் சேர்வதையே விரும்புகிறார்கள். இதற்கென பிரத்யேக நுழைவுத்தேர்வுகள் உண்டு. ஜே.இ.இ., முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் என்.ஐ.டி.,யிலும் ஜே.இ.இ.அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஐ.ஐ.டியிலும் சேர்ந்து படிக்கலாம். இவற்றைத் தவிர்த்து பொறியியல் படிப்புகளில் அண்ணா பல்கலைக்கழகம், அங்கீகாரம் பெற்ற தனியார் பொறியியல் கல்லூரிகளில் நுழைவுத்தேர்வு முறை இல்லாமல் கலந்தாய்வு முறையில் சேர்க்கை நடைபெற்றுவருகிறது.
செலவு செய்து படிக்கும் உயர்கல்விதான் சிறந்த கல்வி. அப்படி படித்தால்தான் உடனடியாக வேலை கிடைக்கும் என்கிற என்கிற சராசரிச் சிந்தனை இன்றும் நிலவுகிறது. அது முற்றிலும் தவறு. பத்தாம் வகுப்பு முடித்தவுடன் பணிவாழ்க்கையைத் திட்டமிட்டுப் படிக்க நினைப்பவர்களுக்கு உகந்தவை பாலிடெக்னிக் எனப்படும் தொழில்சார்ந்த படிப்புகள். அதேபோல நிச்சயமாகப் பெண்கள் பாலிடெக்னிக் படித்து ஜொலிக்க முடியும். அது மட்டுமல்லாமல் இயந்திரம் (மெக்கானிக்கல்) தவிரவும் ஏகப்பட்ட படிப்புகள் இதில் உள்ளன.
பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு மேலும் இரண்டாண்டுகள் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து அதன் பின்னர் கல்லூரியில் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் படித்து வேலைக்குச் செல்வது ஒரு வகை. ஆனால் பாலிடெக்னிக் படிப்பை முடித்தவுடன் வேலைக்கு உத்தரவாதம் உண்டு. அதே வேளையில் நீங்கள் மேற்கொண்டு படிக்க ஆசைப்பட்டால் நேரடியாகப் பி.இ. இரண்டாம் ஆண்டில் சேர்ந்துகொள்ளலாம். சொல்லப் போனால், பொறியியல் படிப்பை ஆழமாகக் கற்றுக்கொள்வதற்குச் சரியான அடித்தளம் அமைத்துக் கொடுப்பவை பாலிடெக்னிக் படிப்புகள்தான். இதைப் படிப்பதன் மூலம் உங்களுக்குப் பொறியியல் குறித்த செயல்முறை கல்வியும்; அடிப்படை அறிவும் கிடைக்கும்.
பல்கலைக்கழகங்கள் பொறியியலுக்குப் பரிந்துரைக்கும் பாடத்திட்டத்தின் அடிப்படைக் கருத்துகள் பாலிடெக்னிக் படிப்புகளிலேயே சொல்லித்தரப்படுகின்றன. பிளஸ் டூ-வை சராசரியாகப் படித்து முடித்த மாணவரைக் காட்டிலும் பாலிடெக்னிக் படித்த ஒரு மாணவருக்குத் தொழில்நுட்ப அறிவு நிச்சயம் கூடுதலாக இருக்கும். அதிலும் பாலிடெக்னிக் பட்டயப் படிப்பும் (Diploma) பி.இ. பட்டமும் (Degree) உங்களிடம் இருந்துவிட்டால் நிச்சயம் நல்ல சம்பளத்தோடு கூடிய வேலையும் பதவிஉயர்வும் நிச்சயம்.
கொடுக்கப்பட்டிருக்கும் பட்டப்படிப்புகளோடு இன்னும் ஒவ்வொரு துறையிலும் பட்டப்படிப்புகள் தனித்தனியாக விரிந்துகொண்டே செல்கின்றன. இதைப் பற்றி முதலில் விரிவாக அலசி ஆராய்ந்து முடிவெடுப்பது பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கைகளில்தான் உள்ளது.
*முதலில் உங்களுக்கு ஈடுபாடுள்ள துறை எது? நீங்கள் என்னவாகப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள்.
*உங்களுக்கான துறையைத் தேர்வு செய்வதோடு அதற்குரிய பட்டப்படிப்பை பயில அங்கீகாரம் பெற்ற கல்லூரியைத் தேர்வு செய்யுங்கள்.
* எதிர்காலத்தில் அந்தத் துறைக்கு வேலைவாய்ப்பு சிறப்பாக இருக்கிறதா என்பதையும் உறுதி செய்துகொள்ளுங்கள்.
* படிக்கும்போதே பட்டப்படிப்பு சம்பந்தப்பட்ட தொடக்கநிலை உயர் தேர்வுகளையும் எழுதுவதற்குத் திட்டமிடுங்கள்.
* பெற்றோர்களின் விருப்பத்துக்கு செவிசாய்க்காமல் உங்கள் விருப்பத்துக்கேற்ற துறையில் பிடித்த பட்டப்படிப்பை தேர்வு செய்யுங்கள்.
உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமையும். ஆல் தி பெஸ்ட்!